Skip to main content

அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை யூடியூபில் நேரடி ஒளிபரப்பு! - உயர் நீதிமன்றம் அதிர்ச்சி! 

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Ariyar exam cancellation case trial live broadcast on YouTube! - High Court shocked!

 

 

கரோனா ஊரடங்கால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை வழங்குவதற்கு தடைகோரி ராம்குமார் மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்குகளில் பதிலளித்த தமிழக உயர் கல்வித்துறை, அனைத்து பல்கலைக்கழகங்களிடம் ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலன் கருதியுமே இந்த முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது.

 

மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்குகள், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் காணொளியில் நுழைந்து நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால்,  அனைத்து வழக்குகளின் விசாரணையும் நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில், இன்று மீண்டும் 16-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தொடங்கியது முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் கிடைக்கும் காட்சிகளை,  சில மாணவர்கள் சட்டவிரோதமாக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வீடியோ கான்ஃபரன்சிங் நடைமுறைகளை, வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்வதோ, ஸ்கிரீன்ஷாட் எடுப்பதோ நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என ஏற்கனவே பல நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

 

இந்நிலையில், இன்று யூடியூபில் ஒளிபரப்பியது நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்