கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று அரியலூர் மாவட்டம் திருமானூரில் காய்கறிகளை தினசரி திருவையாறு சந்தைக்கு கொண்டு செல்லும் விவசாயி நாகராஜ் மகன் சக்திவேல், ஆங்கில வருடப்பிறப்பன்று விடியற்காலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளங்கோவன் என்பவருக்கு இடுப்புக்கு கீழ் செயலிழந்து போய் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பியதை அடுத்து அவரும் பொங்கல் திருநாள் அன்று பரிதாபமாக இறந்துவிட்டார்.
![Ariyalur incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/p1UqnqQlqia4MT5d5pKWWv2G0H4XdAh9zVDQt9GSeX8/1579516750/sites/default/files/inline-images/1111111_27.jpg)
இறந்த இளங்கோவன் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குந்தபுரம் காலனி தெருவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறப்பிற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க முதல்வர், டிஐஜி, மாவட்ட ஆட்சியர் தலையிட வலியுறுத்தி காலை 6 மணி முதல் தங்களது வீட்டில் அமர்ந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இறந்து போன சக்திவேலின் பெண் குழந்தை, "எங்களது தந்தை உயிரிழப்புக்கு காரணமான வாகனம் மற்றும் உரிமையாளரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கவும், தமிழக முதல்வர், அரியலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஐஜி தலையிட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் வைத்திருந்தது.
இறந்து போன சக்திவேல் மகன் லோகேந்திரன், "எங்களது தந்தை இறந்ததால் வருமானமின்றி படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எனது கல்விச் செலவை ஏற்று உதவிட வேண்டும்" என்ற பதாகையை வைத்திருந்தான். இதே போல் சக்திவேல் மனைவி சங்கீதா, "எனது கணவர் திருமானூரில் விபத்தில் இறந்து விட்டார். எனது கணவர் இறந்து விட்டதால் வாழ வழியின்றி தவிக்கிறோம். எங்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்க உடனடியாக உதவிட வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் வைத்திருந்தார்.