அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது உட்கோட்டை கிராமம். இங்கு வசித்து வந்தவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதாவுக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தகைய சூழலில்தான் சமீபத்தில் இத்தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) இரவு நேரத்தில் யாரோ துணியில் சுற்றி குளியல் அறையில் உள்ள வாளி நீரில் போட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மூட நம்பிக்கையில் பேரனை தாத்தா கொன்றது தெரியவந்துள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால், உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையில் கொலை செய்துவிட்டு, நாடகமாடியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது.