அரியலூர் மாவட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஆலத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலை ஒன்றுக்கு புதுப்பாளையம் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட சொந்தமான நிலம் உள்ளது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படாத பல விவசாயிகளுடைய விளைநிலங்களும் குடியிருப்புப் பகுதிகளும் மிக அருகில் உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான வெங்கடாசலபதி, அவரது மனைவி தமிழரசி, திருவேங்கடம், அவரது மனைவி சந்திரகலா, சீனிவாசன், அவரது மனைவி சூரியகலா, பூலோகம் ஆகியோர் புதிய சுரங்கம் வெட்டுவதால் தங்களது விவசாய நிலத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் வற்றி போர்வெல்லில் தண்ணீர் வருவதில்லை. விவசாய நிலங்களில் புழுதிகள் படிந்து பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் புகாரின் பேரில் அங்கு வந்த தளவாய் காவல்நிலைய போலீசார் மேற்படி விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து அடைத்தனர். அதன் பின்னர் கைது செய்ததற்கான காவல் பதிவேட்டில் விவசாயிகள் கையெழுத்து போடாமலும் உணவு சாப்பிட மறுத்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் எங்களது நிலங்களை விற்று விட்டு வெளியேறச் சொல்லி சிமெண்ட் ஆலை நிர்வாகம் மிரட்டுவதும் போலீசாரை வைத்து பொய் வழக்குப் பதிவு செய்தும் நடைபெற்று வருகிறது. நாங்கள் வாழ்வதா அல்லது குடும்பத்தினரோடு தற்கொலை செய்து கொள்வதா என்ற நிலையில் உள்ளோம்" என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தங்களது வாழ்வாதாரப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது அரியலூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகளால் விபத்துகள், உயிரிழப்புகள், அரசு விதிமுறைகளை மீறி சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதால் பல்வேறு பாதிப்புகள் என விவசாயிகளும் பொதுமக்களும் தினசரி போராட்ட வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.