சென்னை குரோம்பேட்டையில் கார் மீது அரசு பேருந்து உரசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு நேற்று மதியம் மாநகர பேருந்து ஒன்று சென்றது. அசோக்குமார் என்பவர் பேருந்தை இயக்கியுள்ளார். நடத்துநராக இருசப்பன் என்பவர் இருந்துள்ளார். குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலம் கடந்து ரயில்வே கேட் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தது. அப்பொழுது பேருந்துகள் நிறுத்தி வைக்கும் பாதையில் ஜீப் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் ஹாரன் அடித்தும் காரை யாரும் எடுக்காததால் பயணிகளை இறக்கி விட்டு கிளம்பும்போது பேருந்தின் பின் பகுதி ஜீப் மீது உரசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜீப்பின் உரிமையாளர்கள் மாநகர பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் வாக்குவாதம் முற்றி ஓட்டுநர் அசோக்குமார் மற்றும் நடத்துநரை கீழே இறக்கிவிட்டு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். நடு சாலையிலேயே ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சட்ட கல்லூரி மாணவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.