தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (15/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டவ் - தே புயல் தற்போது மத்தியக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. டவ் - தே புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெறும். டவ் - தே புயலானது படிப்படியாக வலுப்பெற்று அதிதீவிர புயலாக மே 18ஆம் தேதி அன்று நண்பகல் போர்பந்தர் - நலியா இடையே கரையைக் கடக்கும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 16, 17 ஆகிய தேதிகளில் தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 18, 19 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தோவாலா (நீலகிரி) - 14 செ.மீ., சோலையாறு (கோவை) - 10 செ.மீ., தக்கலை (கன்னியாகுமரி) - 9 செ.மீ., பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சித்தார் தலா 8 செ.மீ., குழித்துறை (கன்னியாகுமரி) - 7 செ.மீ., குளச்சல் (கன்னியாகுமரி), வால்பாறை (கோவை), மயிலாடு (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ., நாகர்கோவில் - 5 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.