பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 254 பேரில் 152 பேர் உரியத் தகுதியே இல்லாமல் பேராசிரியராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வு நடைமுறையில் பங்கேற்று நியமனம் பெறாதவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயர்க்கல்வி தரப்பில் ஒரு குழுவை அமைத்து கல்வித் தகுதியை ஆராயவும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமனம் நடைபெற்றுள்ளதால் இந்த நியமனம் செல்லாது என உத்தரவிட்டது.