அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்வர் ராஜா கடந்த ஆண்டு சசிகலாவைக் கட்சியில் சேர்க்கக் கோரி பேசியும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக அன்வர் ராஜா செயல்பட்டதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அன்வர் ராஜா இன்று எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகிச் சென்றவர்கள் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று தன்னை அன்வர் ராஜா அதிமுகவில் இணைத்துக்கொணடுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா, “எம்.ஜி.ஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு கட்சியின் பல்வேறு முக்கிய பணியாற்றி வந்த எனக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த சறுக்கலில் இருந்து மீண்டு அதிமுகவில் இணைந்திருக்கிறேன். இயக்கத்தின் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட்டு என்னைக் கட்சியில் மீண்டும் இணைத்திருக்கிறார்கள். அதற்காக நான் நல்ல முறையில் செயல்படுவேன். ஒரு கட்சி மற்ற கட்சியினை விமர்சிப்பது வேறு, கூட்டணி குறித்து விமர்சிப்பது வேறு. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்து கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. 4 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் திமுக இடம் பெற்றிருக்கிறது. இலக்கா இல்லாத அமைச்சராக முரசொலிமாறன் ஒன்னறை ஆண்டுகள் இருந்தார். முரசொலி மாறன் இறுதிச் சடங்கிற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகிய மூன்று பேரும் வந்திருந்தனர். ஆக அப்படி திமுகவும், பாஜகவும் பின்னிப்பிணைந்து கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் இடையூறு ஏற்படுமானால் கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அதிமுக தயங்கியது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று 10 நாட்கள் தங்கி இருந்து கூட்டணியை முறித்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு வந்தவர் எனபது வரலாறு. அதனால் அதிமுக இன்றைக்குப் புதிதாக பாஜகவுன் கூட்டணி வைக்கவில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகுதான் வேலை அதிகமாக இருந்தது. அதனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. இப்போது மீண்டும் கட்சியில் இணைந்திருப்பதால் எனக்கும் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. அன்வர் ராஜா என்ற பெயரும், எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனது பெயரும், தோற்றமுமே எனக்கு மிகப்பெரிய முக்கியத்துவம், அடையாளம். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.