2020 ஜல்லிக்கட்டு தொடங்கிய அவனியாபுரம் முதல் உலகப் புகழ் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ. அனுராதாவின் காளை ராவணன் பற்றியே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் பேச்சாக இருந்தது.
இந்த காளை ‘ராவணன்’, எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி கிடைத்தது.. அதன் பின்னனி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. பளு தூக்கி போட்டியில், காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அண்ணன் மாரிமுத்து, படிப்பை துறந்து கூலி வேலை செய்து அவரை இந்த அளவுக்கு உயர்த்தினார். விளையாட்டில் சாதித்ததால் தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ .ஆக பணி கிடைத்தது.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுவந்த அனுராதாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்படித்தான் தஞ்சை நண்பர் சக்தி, தன் தோழியான அனுராதாவுக்காக தஞ்சை வத்திராயிருப்பு பாலச்சந்திரன் கிடையில் இனப்பெருக்கத்திற்காக வைத்திருந்த காளையை வாங்கி அனுராதாவுக்கு பரிசாக வழங்கி, "உனக்கு இந்தக் காளையும் பெருமை சேர்க்கும் என்று சொல்லி கொடுத்தார்". தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' என பெயர் வைக்க, குடும்ப பெண்களே சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன் ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.
அனுராதாவுக்கு பரிசாக கிடைத்த காளை என்பதால், அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன்முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்தக் களமே பாராட்டியது. ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. சிறந்த காளை என்ற பெயரோடு வீட்டுக்கு வந்தது.
அடுத்த நாள் உலகப் புகழ் அலங்காநல்லூரில் காலை 8.30க்கு அனுராதாவின் ராவணன் களமிறங்கி கலக்கியதும், நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது. அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் மாலை அறிவித்தபோது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இன காளைக்கு முதல் பரிசும் நாட்டு இன காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டு இனத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டு போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு கலப்பினத்தின் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது.
ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கினான். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் முரட்டுச்சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாடிய ராவணன், யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த மாரிமுத்து கயிறு வீசியும் ஒருவாரமாக பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்தநிலையில்தான், கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைலமரக் காட்டிற்குள் பெரிய புற்றைக் கொம்பால் குத்தி உடைத்த நிலையில், அருகிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும்போது, “முரட்டுசோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றியிருக்கிறான். கிள்ளுக்கோட்டை காட்டில் இருந்த புற்றில் நல்லபாம்பு செல்வதைப் பார்த்து, பெரிய உயரமான புற்றைக் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால் அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கிவந்து, மாலைகள் அணிவித்து, மனிதர்களுக்குப் போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்களும், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளையை சாவு தேடி வந்தது வேதனையாக இருந்தது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது” என்றனர்.
பரிசாக வந்த ராவணன் பரிசுகளை அள்ளிக் குவிப்பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் அதே ரசிகர்கள் வெற்றி மாலைக்குப் பதில் ராவணன் சடலத்திற்கு கண்ணீரோடு மாலை அணிவித்ததைக் காண வேதனையாக இருந்தது. தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருந்த அனுராதா கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
ராவணன் உடலைப் பார்க்க வேண்டும் என்று பயிற்சியாளர்களிடம் கெஞ்சியும் கரோனா காரணமாக வர முடியவில்லை. அதனால் வீடியோ கால் மூலம் மாலைகளோடு மாலையாக கிடந்த ராவணன் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்திய அனுராதா, 3 மாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் ஊருக்கு வந்தவர், நேராக ராவணன் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று கதறி அழுதுவிட்டே வீட்டுக்கு வந்தார்.
இதுகுறித்து அனுராதா எஸ்.ஐ. கூறும்போது, “ராவணன் எனக்குப் பரிசாக கிடைத்த காளை. எங்களுக்குப் பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்த ராவணனை பலரும் கேட்டார்கள். இறுதிவரை எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று காளையாக இல்லாமல், பிள்ளையாக வளர்த்தோம். இப்படி பாதியில் போவான் என்று நினைக்கவில்லை. பயிற்சியில் இருந்த என்னால் வர முடியவில்லை. கதறி அழுவதைப் பார்த்து என்னுடன் பயிற்சியில் இருந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். இப்பத்தான் ஊருக்கு வந்தேன் ராவணன் விதைக்கப்பட்ட இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்தினேன். இனிமேல் எங்களிடம் வளரும் ஒவ்வொரு காளையும் ராவணனாகதான் வளரும். ராவணன் என்ற பெயரிலேயே களமிறக்குவோம்” என்றார்.