சென்னை ஐஐடியில் 4 மான்கள் உயிரிழந்த நிலையில், ஒரு மான் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மானின் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வளாகத்தில் உள்ள மாற்ற மான்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவுக்காக காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் மான்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்த்ராக்ஸ் நோயால் மான் இறந்துள்ள நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் மற்றும் ஐஐடி வளாகத்தில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிண்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் உணவுப்பொருட்களை விலங்குகளுக்குத் தரக்கூடாது, விலங்குகளைத் தொடக்கூடாது என ஐஐடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.