சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் ஷங்கர், ரஜினிகாந்த், பாரதிராஜா மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக பல்கலைக்கழகம் 'மாமனிதன்' திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை கௌரவிக்கும் விதமாக 'டாக்டர் ஆப் ஆர்ட்ஸ்' என்ற கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பிக்க உள்ளது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, 'அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக பல்கலைக்கழகம் எனக்கு 'டாக்டர் ஆப் ஆர்ட்ஸ்' என்ற கௌரவ டாக்டர் பட்டமும், விஜய் சேதுபதிக்கு கௌரவ டாக்டர் பட்டமும் 'மாமனிதன்' படத்திற்காக வழங்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.