பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி இன்று (03/02/2020) திமுக சார்பில் சென்னையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலை 08.15 மணியளவில் வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் இல்லம் அருகே தொடங்கிய அமைதி பேரணி, அண்ணா நினைவிடத்தை சென்றடைந்தது.
அதைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல் கலைஞர் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இதனிடையே அண்ணா நினைவிடம் அருகே திமுகவினர் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணா நினைவிடத்துக்கு முதல்வர் வரவுள்ளதால் திமுக தொண்டர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் 10.00 மணிக்கு பிறகே அண்ணா நினைவிடத்தில் தொண்டர்கள், பொது மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று காவல்துறை வட்டார தகவல் கூறுகின்றனர்.