![Annamalai who reported to the Tamil Nadu Governor with a trunk box](http://image.nakkheeran.in/cdn/farfuture/8aMBpi9gkvI2rNys9pnIN0XVMpjvounsomnpY2AAprg/1690369767/sites/default/files/inline-images/a809.jpg)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் சிலரின் சொத்துப்பட்டியல் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு திமுக சார்பில் அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநரை, இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். சந்திப்பின்போது திமுக சொத்துப்பட்டியல் - 2 குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக சொத்துப் பட்டியல் - 2 எனப் பெரிய ட்ரங்கு பெட்டியை தமிழக ஆளுநரிடம் வழங்கினார். இதில் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 'என் மண்; என் மக்கள்' என்னும் ஊழலுக்கு எதிரான பேரணியை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், தற்போது ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.