Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்குக் கத்தி குத்து! பாதுகாப்பை உறுதிபடுத்த இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Annamalai University student issue! Indian Student Union urges to ensure safety

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பரணிதரன் தனது சொந்து ஊருக்குச் சென்றுவிட்டு திங்கள் கிழமை மீண்டு கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது வழியில் சில மர்ம நபர்கள் அவரை மடக்கி அவரிடம் பணம் கேட்டு, கத்தியால் அவரை குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் செம்மலர் மற்றும் மாவட்டச் செயலாளர் குமரவேல் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் பரணிதரன், தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று மீண்டும் கல்லூரிக்கு திரும்பிய திங்கள் கிழமை அதிகாலை 2.45 மணி அளவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள், மாணவ மாணவிகள் விடுதிகள் இயங்கி வருகிறது, 24  மணி நேரமும் பணியாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் இருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்க கூடிய ஒரு பாதையில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

மாவட்ட காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தி மாணவர்களுடைய பாதுகாப்பையும் பொதுமக்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்