தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் (14.07.2021) கோவை வழியாக பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு, சென்னை வரும்வரை ஒவ்வொரு இடமாக வரவேற்பளிக்க தமிழ்நாடு பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி கோவையில் நேற்று முன்தினம் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். வரவேற்பின்போது பல இடங்களில் பட்டாசு வெடித்ததில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்கவுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று பொறுப்பேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.