தமிழகத்திற்குக் காவிரி தண்ணீரை விட மாட்டோம் என்ற கர்நாடக காங்கிரஸ் அனைத்து எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் செல்லக்கூடாது, அப்படி சென்றால் மீண்டும் தமிழகத்திற்குள் முதல்வர் வர அனுமதிக்க மாட்டோம் என கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஒன்பதாண்டு கால பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் "மாற்றத்திற்கான மாநாடு" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, “கரூர் மாவட்டத்திற்கு இன்று தீபாவளி பண்டிகை போல் உள்ளது. சித்தர் கருவூரார் உள்ளிட்ட மகான்கள் வாழ்ந்த ஆன்மீக ஸ்தலமான சிறப்புமிக்க, தமிழகத்தின் மைய மாவட்டமான கரூர். அரசியல் கேடுக்கு மையப்புள்ளியாக கரூர் மாறி விட்டது. அதனால்தான் இந்த கூட்டத்திற்கு கரூர் மாற்றத்திற்கான மாநாடு என தலைப்பு வைக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தன. மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சென்று அனுமதி வாங்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தை ஒரு மாதத்திற்கு புக் செய்திருப்பதாக திமுகவினர் கூறினர்.
செந்தில்பாலாஜியின் பதவிக்கு இந்த மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி-யும் போட்டி போடுகின்றனர். அவர்கள் பெயரை குறித்து வைத்துள்ளோம். இந்த ஒருவாரமாக அவர்கள் செய்ததை எத்தனை நாள் ஆனாலும், மன்னிக்க மாட்டோம். செந்தில்பாலாஜியின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்குகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பாஜக தொண்டர்கள் கரூரில் கைது செய்யப்படுகின்றனர். மோடியின் ஆட்சி சாதனையை பேச கூடி உள்ளோம். உலகத்தில் நம்பர் 1 பிரதமர் என்று பெயர் வாங்கியுள்ளார். எலன்மஸ்க் மோடியின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறுகிறார். ஆன்லைன் பரிவர்த்தனையை உலகத்துக்கே மோடி கற்று தருகிறார் என சுந்தர் பிச்சை கூறுகிறார். உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் பிரதமர் மோடியை பாராட்டி, விருது வழங்குகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்குத்தானே தன்னை நம்பர் ஒன் என்று சொல்லுகிறார். மணல் கடத்தல், கள்ளச் சாராயம், அழுகிய முட்டை கொடுப்பதில், கஞ்சா என அனைத்திலும் நம்பர் ஒன் நமது முதல்வர். அமைச்சர்களால் தூக்கம் போய்விட்டது என இந்திய வரலாற்றில் கூறிய ஒரே முதல்வர் நமது முதல்வர். கொலை, கொள்ளை குற்றவாளிகளை பிடிக்காமல், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை கைது செய்கிறார்கள்.