தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையேற்று கலந்துகொண்டார். தொடர்ந்து, இந்து அறநிலையத் துறை தலைமையகம் நோக்கி செல்லவிருந்த பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், உடனே அண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும், நுங்கம்பாக்கம் போலீசார் பாஜகவினர்கள் 800 பேரை 4 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது, "கணவனை இழந்த பெண் உடன் கட்டை ஏறும் முறை எப்போதிலிருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறிய வேண்டும். பின், இந்த வழக்க முறை சனாதன தர்மத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? இல்லை வெளிநாட்டவர்களின் படையெடுப்பிற்கு பின் வந்ததா? என பார்க்க வேண்டும். அந்த காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பில் நமது நாட்டின் மன்னனோ, போர் வீரனோ இறந்துவிட்டால், இறந்தவரின் வீட்டுப் பெண்களை பரிசுப் பொருளாக வெள்ளையர்கள் எடுத்து செல்லத் தொடங்கினர். எனவே, பெண்கள் தங்கள் கர்ப்பை காப்பாற்றவே உடன் கட்டை ஏறும் முறைமை வந்தது. இதனால் தான், உடன் கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மத்தில் இருந்து வரவில்லை என நாங்கள் சொல்கிறோம்" என்றார் அவர்.