உதவி செய்யலைனாலும் பரவாயில்ல… உபத்திரவம் பண்ணாம இருக்கணும் என்பார்கள். பயணிகள் மெட்ரோ ரயிலுக்கு வரிசையில் நின்று அவதிப்படக்கூடாது என்ற நோக்கில், ரீசார்ஜ் செய்து ஸ்மார்ட் டிக்கெட் பெறக்கூடிய வகையிலான க்யாஸ்க்குகளை (kiosk) நிறுவியது சென்னை மெட்ரோ. அதன் செயல்பாடுதான் மேற்சொன்ன வகையில் அமைந்திருக்கிறது.
இந்த க்யாஸ்க்குகள் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நோட்டுகளை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எந்திரங்கள் பணமதிப்பிழப்புக்கு முன்பே நிறுவப்பட்டதால் புதிய 10, 50, 200, மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை. ஆனால், டீமானிடைசேஷனுக்குப் பிறகு 10, 50, 200 ரூபாய் புதிய கரன்ஸிகளே அதிகளவில் புழங்குகின்றன. இதனால் இந்த எந்திரங்கள் உபயோகமில்லாமல்தான் உள்ளன. மாறாக, காசுகொடுத்து டிக்கெட் வாங்குமிடத்தில் நீண்ட வரிசை சேர்ந்துவிடுகிறது.
பல மெட்ரோ ரயில்நிலையங்களில் ஒரேயொருவர் மட்டுமே டிக்கெட் வழங்குவதால் பயணிகள் அதிருப்தியால் முணுமுணுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விரைவில், புதிய கரன்ஸிகளை ஏற்கும்விதத்தில் இந்த க்யாஸ்க்குகள் மாற்றப்படும் என சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட் அதிகாரிகள் கூறுகின்றனர். ‘பணமதிப்பிழப்பு நடந்து எவ்வளவு நாளாச்சு… நீங்க இனிமே தான் மாத்தப்போறீங்களாக்கும்… என்ன சுறுசுறுப்பு’ என கடுப்பும் ஏளனமும் இழையோடக் கேட்கின்றனர் அன்றாடம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள்.