ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் உள்ள கள்ளுப்பட்டியில் பிரசித்த பெற்ற கோவிலாக இருந்து வருகிறது பட்டாளம்மன் திருக்கோவில்.
ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறது. இருந்தாலும் பாரம்பரிய பூசாரிகள் தான் பட்டாளம்மனுக்கு பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட பட்டாளம்மனை பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வணங்கி சென்றாலே அவர்கள் நினைத்த காரியம் நடக்குமாம். அதுனாலேயே தேர்தல் வந்தால் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். உள்பட சர்வ கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எல்லாம் இந்த பட்டாளம்மன் திருக்கோவிலுக்கு படையெடுத்து வந்து வழிபட்டு விட்டுத்தான் தேர்தல் பணியை தொடங்குவது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது.
அதுபோலதான் வரக்கூடிய இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போது தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். உசுப்பிவிட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து தான் ஊர் ஊருக்கு கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடந்து வருகிறது.
ஆனால் கடந்த 11ம் தேதி முதன் முதலில் பெரியகுளத்தில் கட்சி நிர்வாகிககளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல் கள்ளுப்பட்டியில் உள்ள பட்டாளம்மனை வழிபட்டு வருவதற்காக மாலை 4 மணிக்கு பெரியகுளத்தில் உள்ள சில ர.ர.க்களுடன் ஓ.பி.எஸ். பட்டாளம்மன் கோவிலுக்கு சென்றார்.
அப்போது கோவிலில் முன் கதவை சாத்தி இருப்பதை கண்டு டென்சன் அடைந்த உடன் வந்த ர.ர.க்கள் அதை திறந்துவிட்டு ஓ.பி.எஸ்.-ஐ உள்ளே அழைத்து சென்றனர். அப்பொழுது கோவிலுக்குள் பூசாரி இல்லாமல் மூலஸ்தானமே பூட்டி இருப்பதை கண்டு ஓ.பி.எஸ். உள்பட ர.ர.க்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
அப்படி இருந்தும் ஓ.பி.எஸ். அரைமணி நேரத்திற்கு மேல் கோவில் வளாகத்திற்குள் காத்து கிடந்தும் கூட பூசாரி வரவில்லை என்பதால் டென்சன் அடைந்த ஓ.பி.எஸ். பட்டாளம்மனை வழிபடாமலேயே திரும்பி சென்று, முதன் முதலில் பெரியகுளத்தில் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் கேட்டபோது... தேர்தல் காலங்களில் இந்த பட்டாளம்மனை வணங்கிவிட்டு சென்றாலே வெற்றி பெற்று விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருந்து வருகிறது. அதுனாலேயே ஓ.பி.எஸ். டிடிவி, ஜெயராமன், பார்த்திபன், பொன்.முத்துராமலிங்கம், ஆரூண், செல்லப்பாண்டியன், மூக்கையா இப்படி பல சர்வ கட்சியினரும் வந்து பட்டாளம்மனை வணங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து வந்து கொண்டும் இருக்கிறார்கள்.
அதுபோல்தான் தற்போது தேர்தல் வர இருப்பதால் முதன் முதலில் பட்டாளம்மனை தரிசிப்பதற்கு ஓ.பி.எஸ். வருவதாக காலையிலேயே ஒன்றிய செயலாளர் அன்னபிரகாசிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒன்றியம் ஓ.பி.எஸ். வருவதை தெரியப்படுத்தாமலும் கட்சிக்காரர்களுக்கு சரிவர தெரியப்படுத்தாமலும் இருந்துவிட்டார்.
ஏற்கனவே கள்ளுப்பட்டியில் டிடிவி ஆதரவாளர்கள் தான் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள். ஆளுங்கட்சிகாரர்கள் பெயரளவில் தான் இருக்கிறார்கள். அதுலயும் உள்கட்சி கோஷ்டி பூசலும் இருப்பதால் ஓ.பி.எஸ். வருவதை யாருமே கண்டுகொள்ளவில்லை. கோவில் பூசாரிக்கும் தெரியப்படுத்தவில்லை. இந்தநிலையில்தான் திடீரென ஓ.பி.எஸ். கோவிலுக்க வரவே கோவில் மூலஸ்தானமும் பூட்டி இருப்பதை கண்டு மனம் நொந்துபோய் திரும்பிவிட்டார்.
இதுவரை பட்டாளம்மனை முதலில் வணங்கி வந்த ஓ.பி.எஸ்.-க்கு இப்படி பட்டாளம்மனை அவரை விரட்டியிருப்பதை பார்க்கும்போது வரக்கூடிய தேர்தலில் வெற்றியே ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும் என்று கூறினார்கள்.