சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் வெள்ளிக்கிழமை(12.7.2024) மதியம் 2.10 மணிக்கு நடைபெற்றது. நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.
ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 11-ஆம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. ஆயிரம் கால் மண்டபத்தில் ராஜதர்பார் காட்சியளித்த சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் எம்.பிரசன்னக்குமார் மோட்டுப்பள்ளி மற்றும் அவரது மனைவி, சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஜூலை 13-ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலாளர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கு.த.கு கிருஷ்ணசாமி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.