Skip to main content

அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை! –சீமான் கண்டனம்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை! –சீமான் கண்டனம்

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நீட் தேர்வுக்கு எதிராக உயிரிழந்த அரியலூர், செந்துறையைச் சேர்ந்த அனிதாவின் தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-09-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற மொழிக்கேற்ப, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மருத்துவக்குரிய மதிப்பெண்கள் (CUT-OFF) 196.5 பெற்ற அரியலூர், செந்துறையைச் சேர்ந்த தங்கை அனிதா, நீட் எனும் கொடுங்கோன்மை அநீதித்தேர்வு முறைக்கெதிராக தன்னுயிரை இழந்திருப்பது என்னை ஆற்றாமுடியாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மருத்துவராகி எம் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய தங்கமகள் இன்று மண்ணாகிப் போனாளே என்கிற ஆற்றாமையிலும், வேதனையிலும் தமிழ்த்தேசிய இனம் கொந்தளித்துக் கிடக்கிறது.

தொடக்கம் முதலாகவே தேசிய அளவிலான மருத்துவத் தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும், இன்னபிற இயக்கங்களும், இனமானத் தமிழர்களும், சமூக ஆர்வலர்களும் போராடி வருகிறோம். நாளை (02-09-17) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கிறது. மக்களின், மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டக்குரலுக்கு செவிசாய்க்காத மத்திய அரசும், தமிழக மக்களின் கல்வி, பொருளியல், வாழ்வியல் சூழலைப் புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றமும்தான் தங்கை அனிதாவின் உயிரைக் காவுவாங்கியிருக்கிறது. எத்தனைக் கனவைச் சுமந்து இரவுபகல் பாராது படித்து, கடுமையாக உழைத்து இவ்வளவு உயரிய மதிப்பெண்களை எமது தங்கை பெற்றிருப்பாள் என்று நினைக்கும்போது நெஞ்சம் அடைக்கிறது. இதற்கு மேலும், எவ்வளவுதான் மதிப்பெண் பெறுவது? இந்த மண்ணின் மகளாய் பிறந்ததால் என்னால் மருத்துவராய்கூட ஆக முடியாதா என்ற என் தங்கையின் கேள்விகளுக்கு உள்ளமற்ற உச்ச நீதிமன்றமும், மனசாட்சியற்ற மத்திய அரசும், கைப்பாவையாக செயல்படும் கையாலாகா மாநில அரசும்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த நீட் தேர்வு முறை எமது தமிழின இளையோரின் மருத்துவக் கனவிற்கு சாவு மணி அடித்திருக்கிறது என்பதைத் தனது உயிரைத் தந்து உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறாள் தங்கை அனிதா. அவரது தற்கொலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும்கூட, அதன்பின்னால் நிற்கிற கேள்விகளுக்குத் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பதிலளித்தே தீர வேண்டும். மத்தியிலே மோடி அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தையும், தமிழர்களையும் அழிப்பதற்கான வேலையைத் திட்டமிட்டு தொடங்கி நடத்தி வருகிறது. இதனையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதுகெலும்பில்லாத மாநில அரசு, பதவியைக் காப்பாற்றிக்கொள்வதே தனது உயரிய இலக்காக செயல்பட்டு மக்களின் உயிரோடும், மானத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதிகாரமும், சட்டமும் கைகோர்த்து நிகழ்த்திய கொடுங்கொலை எம் தங்கை அனிதாவின் மரணம் என உறுதியாக சொல்கிறேன்.

நீட் தேர்வு முறையை ஒழிக்கத் தமிழின இளையோரும், மாணவரும் உடனடியாகப் போராட்டக்களங்களில் இறங்கி ஜல்லிக்கட்டுக்காக நடந்த தைப்புரட்சி போல, இன்னொரு புரட்சியை நிகழ்த்த வேண்டுமே ஒழிய, உயிரை இழப்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாது. எனது தங்கை அனிதாவைப் பிரிந்து வாடும் எமது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது விழிதிரைந்த கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். எனது தங்கை அனிதாவின் மரணம் எந்த நோக்கத்திற்காக நிகழ்ந்ததோ அந்த நோக்கத்தை அவளது உடன்பிறந்தார்கள் நிறைவேற்றி தங்கையின் இலட்சியக்கனவை மெய்ப்படச் செய்வோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்