Skip to main content

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நேற்று காலை கோவை வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு, பஞ்சமி நிலம் மீட்பு, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் அவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். சில அமைப்புகள் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய உபகரணங்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பயனாளிகள் உடனடியாக எங்களுக்கு புகார் செய்யலாம். தமிழகத்தில் பெரும்பாலான உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில்தான் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் 10–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கிவிட வேண்டும். அதை ஒப்பந்த நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் கண்டிப்புடன் உத்தரவிடவேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி சரியான நேரத்தில் சம்பளம் வழங்கவில்லை என்றால் அந்தந்த உள்ளாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவுக்கு கால்நடைத்துறையில் டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோன்று வேளாண் கல்லூரியில் பி.டெக் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்கவும் இடம் கிடைத்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து உள்ளார். வெளியில் இருந்து பலர் அழுத்தம் கொடுத்ததால்தான் அவர் தற்கொலை செய்து உள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலும் நாங்கள் அரியலூருக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினோம். அவருக்கு வெளிஅழுத்தம் கொடுத்து தற்கொலை செய்ய தூண்டியது யார்...? என்பது குறித்து விசாரணை நடத்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவேண்டும். மாணவி அனிதாவை இழந்து வாடும் அவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்...” என அவர் கூறினார்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்