ஆறு வயது வரையுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க தோற்றுவிக்கப்பட்ட அங்கன்வாடியில், கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு, கெட்டுப்போய் துர்நாற்றமடிக்கும் அழுகிய முட்டைகளை கொடுத்து வருகின்றனர் அங்கன்வாடி அமைப்பினர். இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதை தடுக்கவும், அவர்களுக்கு ஏற்படும் ஊட்டசத்து குறைப்பாட்டை களையவும், இந்திய அரசால் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டதே அங்கன்வாடி மையங்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை அங்கன்வாடி மையங்களில் பயறு வகைகள் மற்றும் காய்கறிகளுடன் அவித்த முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதிலும் பள்ளி மாணக்கர்களுக்கு வாரத்தில் ஐந்து தினங்களும், அங்கன்வாடி மையத்திலுள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்தில் மூன்று தினங்களும் முட்டையினை வழங்கி வந்தது மாவட்ட நிர்வாகம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள வடக்கு கீரனூரிலுள்ள அங்கன்வாடி மையத்தில் துர்நாற்றமடித்த அழுகிய முட்டைகளை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது. 15 குழந்தைகள் கொண்ட இந்த அங்கன்வாடி மையத்தில் பல குழந்தைகள் அங்கேயே சாப்பிட்டு விட, சில குழந்தைகளோ வீட்டிற்கு கொண்டு வந்து சாப்பிடுகையில், பெற்றோருக்கு தெரிந்து தற்சமயம் இது சர்ச்சையாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்காக கொடுக்கப்பட்ட முட்டையே விஷமாக மாறியது. இங்கு தான் என்பதால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.