சித்தூர் மாவட்டத்தில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் சுமார் ஏழு மாதங்களுக்கும் மேலாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பொது முடக்கத்தில் படிப்படியான தளர்வுகளை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்களைத் திறக்கலாம் என்றும், இது தொடர்பான இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா, சித்தூர் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா பரிசோதனை செய்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதியானால் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.