புதுச்சேரி அருகேயுள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரை அடுத்த தமிழக பகுதியான ராயப்புதுப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேலு. இவர் கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கௌரி. இந்த தம்பதியின் 4 வயது பெண் குழந்தையான சாருமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் இறந்து போனது. அந்த பெண்குழந்தை டெங்கு காய்ச்சலால் பலியானதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளான்.
ராயப்புதுப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர், பெயிண்டர். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியருக்கு 5 வயது குகன் என்ற ஆண் குழந்தையும், 2 வயது பெண்குழந்தையும் இருந்தன. குகன் அங்குள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குகன் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து குகனை பெற்றோர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குகனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குகனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குகன் பரிதாபமாக இறந்து போனான்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் 2 குழந்தைகள் இறந்து போன சம்பவத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.