கோயம்பேடு பகுதியில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாமக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''கோயம்பேட்டில் பெரிய அளவில் பூங்கா அமைக்க வேண்டும். மக்கள் அதை பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்க வேண்டும். அதனால் முதலமைச்சர் இதனை அவசியமாக செய்ய வேண்டும்.
முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து சுதந்திர தினம் அன்றே இதனை அறிவியுங்கள்.'சென்னையில் மிகப்பெரிய பசுமை பூங்கா கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த 60 ஏக்கரில் கட்ட இருக்கின்றோம்' என்று அறிவியுங்கள். அதற்கு கலைஞர் பெயரைக் கூட வைத்துக் கொண்டு போங்க. காலம் காலமாக மக்களுக்கு பயன்படுகின்ற பூங்காவை உங்கள் காலத்தில் அமைக்க வேண்டும். அதனால் தான் 10 லட்சம் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். நிச்சயமாக இதை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசிடம் என்னுடைய அன்பான வேண்டுகோளை கோரிக்கையாக வைக்கிறேன்'' என்றார்.