திராவிட கட்சிகளோடு மீண்டும் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று அதிமுக, திமுக என இரு பக்கமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது பாமக. திமுகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி ஆர்வம் காட்டுகிறாராம். 5 எம்.பி. சீட், ஒரு ராஜ்ய சபா சீட்டுடன் தேர்தல் களச் செலவுக்கு என பேச ஆரம்பித்தவுடன் திமுகவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதிமுக பக்கம் பாமக போகாமல் தவிர்த்தால்தான் 40 தொகுதி வெற்றி என்கிற இலக்கை யோசிக்க முடியும் என்பதால் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஸ்டாலினுக்கு பல யோசனைகள் வந்துள்ளது. எப்படியும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பாமக நிறுத்தும். அவர்களுக்கு எம்பி தேர்தலில் அதிக சலுகை காட்டுவதா எனவும் திமுகவில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஜக மேலிடம் நேரடியாக மூவ் செய்துள்ளது. ஆனால் பாமக உடனடியாக பிடிகொடுக்கவில்லை. 2014 எம்பி தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவின் அன்புமணி தர்மபுரியில் வெற்றி பெற்றும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தராமல் போனதன் ஏமாற்றத்தை பாமக வெளிப்படுத்தியுள்ளது.
அதற்கு இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் பாமகவுக்கு இரண்டு அமைச்சர் பதவி உறுதியாக உள்ளது என்று பாஜக சொல்லியும் பாமகவை திருப்திப்படுத்த முடியவில்லை. பாமகவைப் பொறுத்தவரை அன்புமணியின் சாய்ஸ் திமுகவாகவும், ராமதாஸின் சாய்ஸ் அதிமுகவாகவும் உள்ளதாம்.