தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்து அதனை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெம்டெசிவிர் மருந்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக அந்த மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நபர்களை போலீசார் கைதும் செய்திருந்தனர்.
இந்நிலையில், அதேபோல் சென்னை அருகே கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதுபோல் 'ஹைலோ ஆப்' என்ற பெயரில் செயலி (app) ஒன்றை வடிவமைத்து, அதில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து விற்கப்படுவதாக பதிவிட்டுள்ளனர். இதையடுத்து வண்டலூரைச் சேர்ந்த சரவணன், இரண்டு தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருந்தக ஊழியர்கள் அறிவரசன், தம்பிதுரை, பணியாளர் விக்னேஷ், தனியார் நிறுவன ஊழியர் நிர்மல் குமார் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு மருந்து விநியோகம் செய்த நபர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.