இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (07/03/2022) மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், ''எங்கள் கட்சியில் உள்ள அத்தனைப்பேருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியல் ரீதியாக தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழியைப்போட்டு எதோ பண்ணிப்பார்த்தார்கள். ஆனால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது'' என்றார்.