பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக மோட்டார் வாகன விதிகளில் தமிழக அரசு திருத்தங்களைச் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கும் போது, ஆண் பயணிகள், பெண்களை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாகப் புண்படுத்தக் கூடிய செயலில் ஈடுபடுதல், புகைப்படங்கள் எடுத்தல், பாடல் பாடுதல் கூடாது எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பேருந்து நடத்துநர், எச்சரிக்கை விடுத்த பிறகு புகாருக்குள்ளான பயணியைப் பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் (அல்லது) வழியில் உள்ள ஏதேனும் காவல்நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளில் புகார் புத்தகங்களைப் பராமரிக்க வேண்டும் என்றும், நடத்துநர் இல்லாத போது, ஓட்டுநரின் பொறுப்பு எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.