திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பொன்வேல் என்பவர் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி உள்ளது. இது அரசிடம் அனுமதி பெறாத துப்பாக்கி எனத் தகவல் வந்தது. இந்தத் தகவலை அறிந்த ஆம்பூர் தாலுக்கா போலீஸார் பொன்வேல் வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்கிறார் என்கிற தகவல் உண்மை என தெரியவந்தது. இதனால் துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு பொன்வேலை கைது செய்தனர்.
![ambur forest police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hsy5eaPEJgZoXfywAbT1mZVigMtlZ-ESxZ89bxFCF64/1584331125/sites/default/files/inline-images/ambur3_0.jpg)
மலைக்கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் நாட்டுத் துப்பாக்கி பெரும்பாலும் காணப்படும். காரணம் வன விலங்குகளால் தங்களுக்கு ஆபத்து வந்தால் அதனை நோக்கியோ அல்லது வானத்தை நோக்கியோ சுடவே அதனை வைத்திருப்பர். அரசின் அனுமதி பெற்று வைத்திருந்தால் காவல்துறை கண்டுக்கொள்ளாது. ஆனால் பலரும் அனுமதியில்லாமல் வைத்திருப்பார்கள். அதனை காவல்துறை பறிமுதல் செய்து அதை வைத்திருப்பவர்களை கைது செய்கிறது.
மலைக் கிராமத்துக்குச் சம்மந்தமில்லாத பச்சகுப்பம் கிராமத்தில் எப்படி நாட்டுத் துப்பாக்கி என போலீஸார் விசாரணை நடத்தியதில், காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்திருந்தேன் எனக் கூறியுள்ளார். காட்டுப்பன்றி வேட்டையாடுவது இருக்கட்டும், இந்தத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது, யார் தந்தது எனத் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.