வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் , வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் கள்ள நோட்டு மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து ஒரு கும்பல் சந்தை, மார்க்கெட் உட்பட வியாபாரம் நடைபெறும் இடங்களில் புழக்கத்தில் விடுகின்றன. இதனால் பல வியாபார பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி காவல் துறைக்கும் பல புகார்கள் சென்றது. இந்நிலையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஒரிஜினல் நோட்டு என வியாபாரிகளை ஏமாற்றிய ஒரு கும்பலை போலிஸ் கைது செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் சிலர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். அவர்கள் தந்த ரூபாய் தாள்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு சோதித்தபோது அவை ரூபாய் நோட்டுகளின் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்தது.
சோதனையில் உறுதியானதால் அதிர்ச்சியான வியாபாரிகள் அந்த இருவரையும் பிடித்து அடித்து உதைத்தனர். உடனடியாக ஆம்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது சிக்கியவர்களில் ஒருவன் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி அலெக்ஸ் என்பது தெரியவந்தது.
அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் ஜோலார்பேட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகர துணைச் செயலாளராக இருப்பது தெரியவந்தது
மேலும் விசாரணையில் ஜோலார்போட்டை நகர போலீஸ் குடியிருப்பு பின்புறம் சாமி திருமணம் மண்டம் அருகே உள்ள இக்பால் மகன் சதாம்உசேன் என்பவரிடம், ரூபாய் 20 ஆயிரம் மாற்றி தந்தாள் ரூபாய் 4 ஆயிரம் கமிஷன் என கூறியுள்ளான். நேற்று முன்தினம் வாணியம்பாடி வாரசந்தையில் 40 ஆயிரம் மாற்றினேன் என சதாம்உசேன் வாக்கு மூலம் தந்துள்ளான்.
ஆம்பூர் தாலூக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன் பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்கிற விசாரணையும் நடந்துவருகிறது.