நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தினர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் தலித் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சனையால் வேதாரண்யத்தில் தீவைப்பு, வாகனங்கள் அடித்து நொறுக்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததோடு, இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்து அந்த பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. வேதாரண்யத்தில் நிலவி வரும் சூழல் குறித்து, அந்த மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த தமிழக அரசு இரவோடு இரவாக புதிய அம்பேத்கர் சிலையை கொண்டு வந்து உடைக்கப்பட்ட சிலையை நீக்கிவிட்டு, அதே இடத்தில் புதிய சிலையை கிரேன் மூலம் வைத்தனர்.
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து வட தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500- க்கும் மேற்பட்டோர் திரண்டு, சாதி வெறியர்களை கைது செய், தண்டனை கொடு என முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதே கோரிக்கையை இவர்களும் முன் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.