கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. பீங்கான் தொழில்நுட்ப கல்விக்காக இந்தியாவில் உள்ள 2 கல்லூரிகளில் இதுவும் ஒன்று. அதேபோல் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரே பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரி இதுவாகும். இக்கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து முதலாமாண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களும், இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு இப்பகுதி மக்களும், முன்னாள் மாணவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலாம் ஆண்டு சேர்க்கை ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், பழைய முறைப்படி பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாமாண்டில் சேர்க்க வலியுறுத்தியும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் அரசு செராமிக் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே கல்லூரியான விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியை மூட வழிவகை செய்யக்கூடாது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களின் தொழில்நுட்பக் கனவை சிதைக்க கூடாது என கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்களது கோரிக்கையை மனுவாக விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்தனர்.