ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர்.
இதுபோன்று பலர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி நேரில் விளக்கம் அளித்து வந்தநிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபொழுது உளவு துறை ஐ.ஜி.யாக இருந்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் திரிபாதி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.