ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் ஏற்கனவே இரண்டு இழுவை ரயில் உள்ளது. தற்போது புதிதாக மூன்றாவது மின் இழுவை ரயிலை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் கோவில் இணைய ஆணையர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மூன்று மின் இழுவை இரயில்கள் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது மின் இழுவை இரயில் 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 40 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 3,200 பக்தர்கள் பயணம் செய்யலாம். இரண்டாவது மின் இழுவை இரயில் 1982-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதில் ஒரு முறை 32 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,560 பக்தர்கள் பயணம் செய்யலாம். மூன்றாவது மின் இழுவை இரயில் 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 36 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,880 பக்தர்கள் பயணம் செய்யலாம்.
மூன்றாவது மின் இழுவை ரயிலில் அதிக பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் மின் இழுவை இரயில் பெட்டிகள் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தொலைக்காட்சி, மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டியும் ஒரே நேரத்தில் 72 பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் 27.04.2023 முதல் மேற்கொள்ளப்பட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டு, தகுதிச் சான்று பெறப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 பக்தர்கள் வரை பயணம் செய்ய இயலும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கும் விடுதிகள் நவீனமயத்துடன் கட்டப்படவுள்ளன. திருப்பதிக்கு இணையாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.