
விழுப்புரம் மாவட்டம் நகராட்சி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் பேசுகையில், ''ஏர்போர்ட்டை விட்டு நான் வெளியே வரும்போது கீழே வருவதற்கு எனக்கு முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. என்னவென்று பார்த்தால் என் கூட எப்படிப் பார்த்தாலும் அறுபது எழுபது பேர் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அது எனக்காக அல்ல. என் கூட போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. நான் விஜய்க்கு அடுத்த இடத்தில் பொதுச்செயலாளர் என்ற இடத்தில் இருப்பதால்தான் போட்டோ எடுத்தது, என்னை வரவேற்பது எல்லாம்.
இவையெல்லாம் எனக்காக என நான் நினைத்துக் கொள்ளவில்லை. இது முழுக்க முழுக்க விஜய்க்கு தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் விஜய் தான். விஜய்யை தாண்டி எங்களுக்கு வேற எதுவும் தெரியாது. எங்களுடைய உயிர் மூச்சு, நாடி அனைத்தும் விஜய் தான். ரசிகர் மன்றமாக இருக்கும்போதும் சரி, நற்பணி மன்றமாக இருக்கும் போதும் சரி, மக்கள் இயக்கமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள், நிர்வாகிகள் என எங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார் விஜய். என்னால் காரில் வர முடியவில்லை மாவட்டச் செயலாளருடைய இருசக்கர வாகனத்தில் தான் இந்த இடத்திற்கு வந்தேன். அந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது. இந்த வரவேற்பு எல்லாம் எனக்கானது அல்ல, இது முழுக்க முழுக்க விஜய்க்காகத்தான். இங்கு இருப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்திருக்கலாம். ஆனால் அதற்கான பலன் 2026 ஆம் ஆண்டு நீங்கள் அதை பார்ப்பீர்கள்' 'என்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வரும் ஆனந்தை மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் வரவேற்க திட்டமிட்டனர். ஆனால் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வரவேற்பு ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.