தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/12/2021) சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினர். அத்துடன், இயேசு கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலைத் திறந்து வைத்த முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த பெருவிழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக தி.மு.க.வின் அரசு உள்ளது. நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன; அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது; இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை" எனத் தெரிவித்தார்.
இந்த பெருவிழாவில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான த.இனிகோ இருதயராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அய்யா வழி சமயத் தலைவர் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் கே.எம்.இல்யாஸ் ரியாஜி, கிறிஸ்துவ மற்றும் அனைத்து சமய தலைவர்கள் கலந்து கொண்டனர்.