காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசின் ‘மக்களை நாடி மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில் நீரழிவு, ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் இல்லங்கள் தேடி சுகாதாரத்துறை சார்பில் மருந்து, மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “திமுக ஆட்சியில் இல்லாத காலங்களிலும் கடந்த பத்தாண்டுகளாக மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மருத்துவர்கள் கடந்த சில மாதங்களாக கடுமையாக பணியாற்றி வந்ததால் கரோனோவை கட்டுக்குள் வைத்து உள்ளோம். மருத்துவர்கள் மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள்கூட கடுமையாக பணியாற்றி வருகிறோம். சுகாதாரத்துறை சார்பில் மக்களை நாடி இந்த மருந்தகம் திட்டத்தின் மூலம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் உங்களை நாடி வீடுகளுக்கே இனி மேல் வந்து சுகாதாரத்துறையினர் வழங்குவார்கள்.
கடலூர் மாவட்டத்தில் 90,000 பேர் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகத்திலேயே இந்ததிட்டம் முதல் முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் அயராத உழைப்பால் நாம் சிறப்பாக இருந்து வருகிறோம். ஓட்டுக்காக உங்களைச் சந்திக்காமல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக சந்தித்து வருகிறோம். எங்களுடைய வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், “தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்ககளை செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வரின் இந்த திட்டம், காட்டுமன்னார் கோவிலில் துவங்கியது மிக சிறப்பானதாகும். 70 நாட்களில் தமிழகத்தில் கரோனாவை முற்றிலும் ஒழித்தவர் நமது முதல்வர். தமிழகத்தில் இது வரை இல்லாத நிலையில் வேளாண்மைத்துறைக்கு ஒரு பட்ஜெட், நிதித்துறைக்கு ஒரு பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதில் எம்.எல்.ஏ.க்கள் சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கலந்துகொண்டனர்.