தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், டிசம்பர் 15,16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு தென் கிழக்கில், 1,170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது இன்று இரவுக்குள், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி, நாளை புயலாக மாறி, தெற்கு ஆந்திரா - வடக்குத் தமிழ்நாடு நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும். இதன் காரணமாக, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மேலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 40 செ.மீ. இது இயல்பைவிட 19% குறைவாகும். சென்னையைப் பொறுத்தவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 73 செ.மீ.. ஆனால் பதிவான மழையோ 34 செ.மீ. மட்டுமே. இது இயல்பை விட 50% குறைவு. புயல் கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை கணிக்கப்படவில்லை. புயல் நெருங்கி வரும்போது கரையைக் கடக்கும் இடம் உறுதிப்படுத்தப்படும்.