குடிபோதையில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தவரால், படுகாயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தன்யஸ்ரீ நலமுடன் மீண்டு வந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்பவர் சுதர்சன். இவரது நான்கு வயது மகள் தன்ய்ஸ்ரீ, கடந்த ஜனவரி 28ஆம் தேதி தனது தாத்தா அருணகிரியுடன் சேர்ந்து அருகாமையில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, இரண்டாவது மாடியில் இருந்து சிவா என்பவர் குடிபோதையில் தவறி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த தன்யஸ்ரீ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தண்டுவடம் மற்றும் கால் எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. குடிபோதையில் விழுந்த சிவாவிற்கு கால் எலும்பு முறிந்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட தன்யஸ்ரீ ஒருமாத சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் திரும்பி வந்துள்ளார். சிகிச்சையின் போது அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, மூளை ஓட்டினை மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு நீக்கி சிகிச்சை அளித்துள்ளனர். இதனால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு தன்யஸ்ரீ தலையில் தொப்பியுடன் இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்குப் பின்னர் தன்யஸ்ரீக்கு மீண்டும் மண்டை ஓட்டின் பாகம் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது தன்யஸ்ரீயின் மருத்துவ உதவிக்காக சுமார் ரூ.7 லட்சம் வரை பல்வேறு அமைப்பினரும், இளைஞர்களும் நிதியாகத் திரட்டி உதவினர். அவர்கள் தந்த நிதியும், பிரார்த்தனையும்தான் தன்யஸ்ரீ நலம்பெற்று வந்ததற்குக் காரணம் என அவரது தந்தை நெகிழ்வோடு பேசியுள்ளார்.