
சேலம் - சென்னை பசுமை வழித் திட்டம் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது குறித்து அக்கட்சி்யின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
’’சேலம் - சென்னை பசுமை வழித்திட்டத்தை பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் விளை நிலங்கள் பறிபோகும், குடியிருப்புகள் அகற்றப்படும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மக்களின் ஒப்புதலின்றி அவர்கள் மீது திணிக்கக்கூடாது. மக்களின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த திட்டத்தை பற்றி மாற்று கருத்து கூறியதற்காக நடிகர் மன்சூர் அலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ், மாணவி வளர்மதி ஆகியோர் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறோம்
சேலம் - சென்னை பசுமை வழித்திட்டத்திற்கு அரசு புறம்போக்கு நிலம் தவிர பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கிராமங்கள் அகற்றப்பட்டு குடியிருப்புகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனால் பாதிக்கப்படும் மக்களும் இந்த திட்டம் வேண்டாம் என்று கூறுகின்றனர். ‘இது பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்படும் திட்டமல்ல கார்ப்பரேட் நலனுக்காகத் தான் இந்த பாதை அமைக்கப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டையும் சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் மக்களின் அய்யத்தையும், அச்சத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கிராமங்கள்தோறும் காவல்துறையினரை அனுப்பி வீடு வீடாக சென்று அச்சுறுத்துவதற்கு தமிழக அரசு முனைந்துள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும்.
சமூக செயற்பாட்டாளர்களைப் பொய் வழக்கு போட்டு ஒடுக்குவதன் மூலம் அரசியல் கட்சிகளை தமிழக அரசு மிரட்டிப் பார்க்கிறது. தூத்துக்குடி படுகொலைகளுக்குப் பிறகு தமிழக காவல்துறையின் அடக்குமுறை மூலம் மக்களின் எதிர்ப்பை முடக்கிவிடப் பார்க்கிறது. இது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
கைது செய்யப்பட்டிருப்பவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டங்களை நடத்தி அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும். அதுவரை பசுமைவழித் திட்டத்துக்கான நடைமுறைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.’’