உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்றில் மரணங்களை அ.தி.மு.க. அரசு மறைப்பதாக ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதேபோல் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை 444 பேரின் மரணத்தைச் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உறுதிசெய்தது. இது தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா உயிரிழப்புகளை மறைத்ததால் தமிழக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கரோனா மரணத்தைப் போல் கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கரோனா தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கின்றது.