
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஈரப் பதத்துடன் கூடிய கிழக்கு திசைக் காற்று வங்கக் கடல் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் 29/10/2022 முதல் துவங்கி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று 30/10/2022) 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் 196 இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக உள்ளது. எனவே சென்னையில் 898 தீயணைப்பு வீரர்களும், பயிற்சி பெற்ற 250 தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர் என தீயணைப்புத்துறை டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.