அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றதால், அதனை ஒப்படைக்கச் சென்றாயோ? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் இரங்கல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் அவர் கூறியதாவது,
மானம் என் மகன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு
என்ற கவிதை யாத்து அதற்கே தன் வாழ்வை இலக்கணமாக்கி தொட்டில் பருவத்திலிருந்து விண்முட்டும் தன்மானச் சிகரமாக திகழ்ந்து காலனோடு போராட்டம் நடத்தி, தமிழ்க் குலத்தை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திய தலைவா!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது நீக்கமற நிறைந்து உங்கள் போராட்ட உலைக்களத்தில் என்னை வார்ப்பித்து, என் ஊனோடும் உயிரோடும், உதிர அணுக்களோடும் நிறைந்த பெருந்தகையே! பொதுவாழ்வில் இந்த எளியேனுக்கு முகவரி தந்த முத்தமிழ் அறிஞரே! செயல் தலைவர் தளபதிக்கு கவசமாகவும், அரணாகவும் தோள்கொடுப்பேன் என்று உங்கள் செவியோரத்தில் அடியேன் சொன்னதைக் கேட்டு உங்கள் முகத்தில் தவழ்ந்த புன்முறுவலை நான் எப்படி மறப்பேன்.
உன்னை நான் இழந்தேனா? என்னை நீ இழந்தாயா? என்று கண்ணீர் மல்க நீங்கள் மேடையில் உரைத்ததை என் சுவாசம் உள்ளவரை மறக்க முடியுமா? கலங்கிக் கதறுகிறது நெஞ்சம். ஆம், தமிழரின் புகழ் வானம் இடிந்தது! தமிழரின் சகாப்தம் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது! தமிழ் இலக்கிய இமயம் சாய்ந்தது! சங்கத் தமிழும், குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர் சங்கரும், தென்பாண்டிச் சிங்கமும், பாயும்புலி பண்டாரக வன்னியனும் என செந்தமிழ் மொழிக்கு அழியாக் காவியங்களையும், கலை உலகில் பராசக்தி, மனோகரா, பூம்புகார் எனும் புரட்சிப் படைப்புக்களையும், வாசிப்போரின் நரம்புகளில் மின்னலைப் பாய்ச்சும் உடன்பிறப்பு மடல்களையும் தீட்டிய எழுதுகோல் ஒடிந்தது. தமிழ்த் தாயின் கரம் ஏந்திய இலக்கிய வீணையின் நரம்பு அறுந்தது! தமிழினம் ஏந்திய வில் முறிந்தது!
தமிழன்னையின் தவப் புதல்வன் பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றதால், அதனை அத்தலைவனிடம் ஒப்படைக்கச் சென்றாயோ? உப்புக்கரிக்கும் கடல் நீரை எங்கள் விழிகளுக்குத் தந்தாயோ? தாயினும் சாலப்பரிந்து, பாசத்தால் உடன் பிறப்புக்களை அரவணைத்து, எண்பது ஆண்டுகள் ஓய்வறியாச் சூரியனாய் தமிழர் தரணிக்கு வெளிச்சம் தந்த பேரொளி மறைந்ததோ?
புறநானூற்றுப் புலவர்கள் எங்கே? சங்கத் தமிழ் பாவலர் எங்கே? பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் எல்லாம் சீர்பாடும் திருக்குவளையில் அஞ்சுகத்தாய் மணிவயிற்றில் ஓர் உருவாய் பிறந்தனரோ உந்தன் வடிவில்? பதினோராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பூம்புகாரை மீட்டெடுத்த கலைச் சிற்பியே! முக்கடலின் சங்கமத்தில் உலகப் பொதுமறை தந்த வள்ளுவனுக்கு விண்முட்டச் சிலை எழுப்பி, குறாளாசானுக்குக் கோட்டமும் கட்டி, அக்குறளுக்கு உன் எழுத்துத் தூரிகையால் ஓவியமும் தீட்டிய ஒப்பிலா மணியே!
அடக்குமுறைகள் உந்தன் சுட்டுவிழி பார்வையில் பஞ்சாய் பறந்தன. நெருக்கடி நிலை இருள் சூழ்ந்தபோது ஜனநாயக ஒளிச்சுடரை உலகம் வியக்க உயர்த்தியது உந்தன் கரம் அன்றோ? ஐந்து முறை மகுடம் ஏந்தி, அரசியலில் ஐம்பெரும் காப்பியமான உங்கள் விழிகள்தானே பெரியாரும், அண்ணாவும். சமூக நீதியின் கலங்கரை விளக்கமாகி, காலத்தால் அழியாத பெரும்புகழை நிலைநாட்டிய எங்கள் தலைவனே! உந்தன் உயிர் ஓய்ந்து உடல் சாய்ந்தாலும் அந்த உயிர் கோடானு கோடி தமிழரின் உயிரோடு கலந்திருக்கும். தமிழரின் மரகதப் பேழையே! மாணிக்க மகுடமே! காஞ்சித் தலைவனுக்குப் பின் அரை நூற்றாண்டு தலைமை தாங்கி, கண்ணுக்கு இமையாக நீங்கள் கட்டிக் காத்த திராவிட இயக்கத்தை பகைக் கூட்டம் நெருங்கொணாது உங்கள் எழுத்தும், செஞ்சொல் வீச்சும், அஞ்சாத நெஞ்சுரமும் எந்நாளும் காத்து நிற்கும். விண்ணும் மண்ணும் இருக்கும் வரை வாழும் தமிழோடு உங்கள் கீர்த்தியும் நிலைத்து நிற்கும்.
உங்கள் மீது துரும்பு விழுந்தாலும் துடிதுடித்து வெகுண்டு எழும் என்போன்ற இலட்சோப இலட்சம் தம்பிமார்களின் கரங்கள் உங்களைக் காவுகொண்ட கூற்றுவனை தடுக்க முடியவில்லையே! என துடிக்கிறது நெஞ்சம்.
நீங்கள் உயிரினும் மேலாகக் காத்து வளர்த்த தி.மு.கழகத்திற்கும், தலைமை தாங்கிடும் தளபதிக்கும் அரணாகக் கடமையாற்ற சூளுரைத்து, பொங்கி வரும் கண்ணீரை இரங்கலாய் அர்ப்பணிக்கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் ஏழு நாட்கள் அரைக் கம்பத்தில் பறந்து, என்றுமுள தென்தமிழ் அறிஞருக்கு தலைவணக்கம் செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.