சேலத்தை அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் இயங்கி வருகிறது. தற்போது தினமும் ஒரே ஒரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டியாபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கையகப்படுத்த உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, வாழை, மஞ்சள், நெல் பயிரிட்டு வருகின்றனர். முப்போகம் விளைச்சல் தரக்கூடிய இந்த விளை நிலங்களை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி உள்ளனர். ஆனாலும், விளை நிலங்களை கையகப்படுத்துவதில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் 30 நாள்களுக்குள் நேரில் வந்து ஆட்சேபனையை மனுவாகக் கொடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீந் அனுப்பி இருந்தது. முதல்கட்டமாக 82 பேருக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதில் ஆட்சேபனை மனு வழங்குவதற்கு தேதியும் குறிப்பிட்டு இருந்தது.
அதன்படி, காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டியாபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 82 விவசாயிகள் ஆட்சேபனை மனுக்களுடன் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள், நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'விளைச்சல் நிலத்தில் விமானம் அவசியமா?', உழவு செய்யும் பூமியை களவு செய்ய விடமாட்டோம்', 'இன்று என் வீடு, வயல் என்றும் என்னுடையது' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கழுத்தில் அணிந்து இருந்தனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆணையர் அன்பு, கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் கழுத்தில் அணிந்துள்ள அட்டைகளை கழற்றிவிட்டு உள்ளே செல்லும்படி கூறினார். இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் அவர்கள் அணிந்திருந்த அட்டைகளை பிடித்து இழுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், மனுக்களை வாங்க ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இல்லாததால் அவர்களைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு, விவசாயிகளிடம் ஆட்சேபனை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மனுக்களை பெற்றுக் கொண்டதற்கான ரசீது தரப்படாததால், அதற்கும் விவசாயிகள் கண்டனக் குரல் எழுப்பினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.