இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று (28.11.2019) இந்தியா வந்தார். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று (29.11.2019) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். கருப்பு கொடியுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது திராவிடர் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களை கொலை செய்த கோத்தபய ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட முயன்ற 20- க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 20- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களை கொன்று குவித்த குடும்பத்தினரை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று கூறியும் கோஷங்களை எழுப்பினர்.