சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ‘நிர்மலாதேவி வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களின் பெயர் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் சேர்க்கப்படவில்லை. நியாயமாக விசாரணை நடத்தாமல், ஸ்ரீவி. கோர்ட்டில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆகவே, சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். அதுவரையிலும், ஸ்ரீவி. கோர்ட்டில் நிலுவையில் உள்ள இவ்வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி.

நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ‘பல்கலை உயர் அதிகாரிகளிடம் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை.’ என்று மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர். பதிலுக்கு அரசுத் தரப்பில், ‘முறையாக விசாரணை நடத்தி, இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது’ என்று வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவி. மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.