'ஒரு கட்சியின் தலைவராக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மரியாதை அளிக்க வேண்டும்' என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் 'அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. மோடி, நட்டாவுடன் தான் எங்களுடைய பேச்சுவார்த்தை' என்று கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், ''தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய தலைவர்கள் கூட்டம் நடக்கின்ற பொழுது அதிமுகவுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கூட்டணியை எப்படி பலமாக்க வேண்டும். கூட்டணியில் எப்படி அதிமுக இணைந்திருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறார். இந்த கூட்டணியைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் எடுத்துச் செல்கின்ற பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே செல்லூர் ராஜுவின் கருத்துக்கு இன்னொரு கருத்து சொல்லி கூட்டணிக்குள்ளாக எந்த விதமான குழப்பங்களும் வர வேண்டாம் என்று பார்க்கிறோம்.
அதே சமயம் அதிமுக தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி இருப்பது பாரதிய ஜனதா கட்சி. அந்த கட்சியினுடைய மாநில தலைவர் அவர். எங்கள் கட்சியினுடைய மாநில தலைவருக்கு கிடைக்கக்கூடிய மரியாதை என்பது தனிப்பட்ட நபருக்காக அல்ல எங்கள் கட்சியின் தலைவருக்காக கொடுக்கப்படும் மரியாதை. அதனால் கூட்டணியைப் பாதிக்கின்ற எந்த ஒரு தகவலையும் கருத்துக்களையும் யாரும் பேசாமல் இருப்பது நல்லது என்று கருதுகிறோம். தமிழகத்திலே தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் பலமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் புதிதாக நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் வருவதற்காக காத்திருக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் இந்த மாதிரியான சிறு சிறு விஷயங்கள் இந்த கூட்டணியை ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இது தொடர்பாக நானும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன்.'' என்றார்.