மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு
தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்:
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித்தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
’’அஇஅதிமுகவை சேர்ந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்துள்ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
15வது தமிழக சட்டமன்ற பேரவை முதல் கூட்டத்திலிருந்தே பேரவை தலைவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுவதை எதிர்க்கட்சி களான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளன.அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப்பின் நடைபெற்றுவரும் உட்கட்சி சண்டையால் மக்கள் நலன் சார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தமிழக அதிமுக அரசு பெயரிழந்து பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உடனே சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். காலம் தாழ்த்தி குதிரை பேர அரசியலுக்கு துணை நிற்க வேண்டாம் என தமிழக ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. எதையுமே பொருட்படுத்தாமல் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து பேரவை தலைவர் தமிழகத்தில் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியுள்ளார்.
அதிமுக அணியினர் போட்டி போட்டுக்கொண்டு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வின் கட்டளைக்கு அடிபணிந்து வருகின்றனர். பா.ஜ.க.வும் தனது சுய நலத்திற்காக குறுக்கு வழியில் தமிழகத்தில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை பயன்படுத்தி வருகிறது.பா.ஜ.க.வின் மோடி மந்திர அரசியலுக்கும், அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கும் தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். நாட்டில் ஜனநாயகம், சமய நல்லிணக்கம், சமூக நீதி கொள்கை நிலைத்திட தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட உறுதியேற் போம். ’’